கட்டமைக்கப்பட்ட சூழல் பிரிவானது கட்டடக்கலை, நகரமைப்புத் திட்டம், நிலப்பரப்பு வடிவமைப்பு, உட்கட்டமைப்பு வடிவமைப்பு மற்றும் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு கட்டப்பட்ட தலையீடு ஆகியவற்றிலிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

ஜெஃப்ரி பாவா மூனமல் விருது

கட்டமைக்கப்பட்ட சூழல்

விடயப் பரப்பு

கட்டப்பட்ட சூழலுக்கான மூனமல் விருது, வடிவமைப்புச் சூழலின் சீரழிவை மீளமைப்பதற்கும் இயற்கைச் சூழலியலைப் புதுப்பிப்பதற்கும் உள்ள திறனைக் கொண்டாடுவதுடன், பரந்த அளவிலான சிறந்து விளங்குதலை அங்கீகரிக்க முயல்கிறது. இது அனைத்து உயிரினங்கள் மற்றும் நிலப்பரப்புகளிலும் சகவாழ்வை சாத்தியமாக்குகிறது. கட்டடக்கலை, நகரமைப்புத் திட்டம், நிலப்பரப்பு வடிவமைப்பு, உட்கட்டமைப்பு வடிவமைப்பு அல்லது நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு கட்டப்பட்ட தலையீடு ஆகியவற்றின் துறைகளிலிருந்து விண்ணப்பங்கள் இருக்கலாம். நகர்ப்புற மற்றும் கிராமப்புறச் சூழல்களில் உள்ள அனைத்து வகையான திட்டங்களையும் சமர்ப்பிக்கலாம். அவை ஒற்றைக் கட்டடங்களாகவோ அல்லது வளாகங்களாகவோ இருக்கலாம்; சுகாதாரம், கல்வி, சமயம் மற்றும் கலாச்சாரப் பயன்பாட்டிற்கான நிறுவனங்கள் உட்பட தனியார், பொது அல்லது நிறுவனத் திட்டங்கள், நகர வடிவமைப்பு அல்லது புதிய நகரங்கள், கைவிடப்பட்ட தொழில் நிலங்களின் மீள் பயன்பாடு மற்றும் தகவமைப்பு மீள் பயன்பாட்டுத் திட்டங்கள் ஆகியவை அடங்கும். அவை வீதிகள், கால்வாய்கள், அணைகள், பாலங்கள், பூங்காக்கள், நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புகள், எரிபொருள் வழங்கல் அமைப்புகள் அல்லது துறைமுகங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களாகவும் இருக்கலாம். வடிவமைப்பு மற்றும் பல்வேறு பயன்பாடுகளுக்கு பன்முகத் துறை அணுகுமுறையைக் கொண்ட சமர்ப்பிப்புகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம். திட்டத்தின் வகை, அளவு, செலவு அல்லது இலங்கைக்குள் அமைவிடம் ஆகியவற்றுக்கான அளவுகோல்களில் எந்தவொரு வரம்புகளும் இல்லை.

தகுதி

  • பரிசீலனை செய்யப்பட, திட்டங்கள் இலங்கைக்குள் அமைந்திருக்க வேண்டும், மேலும் திட்டக் குழுவின் ஒரு பகுதியாக குறைந்தபட்சம் ஒரு இலங்கைத் தலைவர் அல்லது இணைத் தலைமை வகிக்கும் நபர் இருக்க வேண்டும்.

  • சமர்ப்பிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும், அளவு அல்லது துறைசார்ந்தவற்றைப் பொருட்படுத்தாமல், மூனமல் விருதின் முக்கிய வடிவமைப்பு நெறிமுறைகளுடன் ஆழமான மற்றும் அர்த்தமுள்ள ஈடுாட்டைக் காட்ட வேண்டும்.

  • திட்டங்கள் 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் 1ஆம் திகதிக்கும் 2025ஆம் ஆண்டு யூலை 31ஆம் திகதிக்கும் இடையில் முடிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதோடு 2026ஆம் ஆண்டு ஓகஸ்ட் 1ஆம் திகதிக்கு முன்னர் குறைந்தபட்சம் 12 மாதங்களுக்கு செயல்பாட்டில் இருந்திருக்க வேண்டும்.

  • நிறுவனங்கள், முதன்மை வடிவமைப்பாளர்கள் மற்றும் கட்டடக் கலைஞர்கள் உட்பட எவரேனும் திட்டங்களைச் சமர்ப்பிக்கலாம். ஜெஃப்ரி பவா அறக்கட்டளையின் எந்தவொரு அறங்காவலரும் அல்லது பணியாளரும், வழிகாட்டல் குழுவின் எந்தவொரு உறுப்பினரும் அல்லது விருதின் நடுவர்களும், அல்லது தொழில்நுட்ப மதிப்பாய்வுக் குழுவும் தங்களது சொந்தப் படைப்பையோ அல்லது தங்கள் நிறுவனத்தின் படைப்பையோ பரிந்துரைக்க முடியாது.

விண்ணப்பிக்கும் முறை

அனைத்துச் சமர்ப்பிப்புகளும் இணையவழிச் சமர்ப்பிப்பு தளத்தின் ஊடாகவே செய்யப்பட வேண்டும். இதில் வரைபடங்கள், திட்டங்கள், புகைப்படங்கள் மற்றும் கோரப்பட்ட மேலதிக ஆவணங்கள் உள்ளிட்ட விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதும் அடங்கும். 

ஒரு விண்ணப்பதாரரால் இணையவழியாக விண்ணப்பிக்க இயலாத நிலையில், நேரடி முறையில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்காக awards@geoffreybawa.org என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாக விருதுப் பணியாளர்களைத் தொடர்புகொள்ளலாம்.

விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு முன், கீழே உள்ள விண்ணப்ப வழிகாட்டுதல்களைப் பார்க்கவும். விருதிற்காக பல திட்டங்களைச் சமர்ப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், ஒரு விண்ணப்பத்திற்கு ஒரு திட்டத்தை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட ஒளிப்படங்கள், வரைபடங்கள் மற்றும் பிற பொருட்கள் விருது காப்பகத்தில் தக்கவைக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

மதிப்பிடல் நடைமுறை

ஆரம்பச் சமர்ப்பிப்புகள் நடுவர்களால் குறுகிய பட்டியலிடப்படும்.

அனைத்துத் திட்டங்களுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்குவதற்கும், அவற்றைத் மதிப்பாய்வு செய்யும் நடுவர் குழுவின் பணியை எளிதாக்குவதற்கும், ஒவ்வொரு திட்டமும் தரப்படுத்தப்பட்ட வடிவத்தில் தயாரிக்கப்படுகிறது. ஜெஃப்ரி பாவா மூனமல் விருதின் பணியாளர்கள், விண்ணப்பதாரரால் கோரப்பட்டு தயாரிக்கப்பட்ட பொருட்களிலிருந்து விளக்கக்காட்சிப் பகுப்புகளை (portfolios) ஒன்றிணைப்பார்கள். விருதுக் குழுவினர் ஒவ்வொரு திட்டத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்கள் மற்றும் பொருட்களையும் பரிசீலித்து ஆய்வு செய்வார்கள். கூடுதல் தகவல்கள் அல்லது ஆவணங்களைச் சமர்ப்பிக்க தேவையானபட்சத்தில், விண்ணப்பதாரர்களைத் தொடர்புகொள்ளலாம்.

தேர்வுப் பட்டியல் மின்னணு ஊடகங்கள் மற்றும் பிற ஊடகங்களில் வெளியிடப்படும்.

தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படைப்புகள் மீளாய்வுக் குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு, இறுதித் தீர்ப்புக்கு முன்னர் நடுவர் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் நடுவர்கள் தங்கள் இறுதி முடிவை எடுப்பார்கள். அது 2027ஆம் ஆண்டு யூலை 23ஆம் திகதி அறிவிக்கப்படும். நடுவர்களின் முடிவே இறுதியானது.

விண்ணப்ப வழிகாட்டல்கள் – கட்டமைக்கப்பட்ட சூழல்

மூனமல் விருதிக்கான விண்ணப்பப் படிவம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: திட்ட விவரங்கள், திட்டத் தாக்கம், மேலதிக ஆவணங்கள் மற்றும் பிரகடனம். இந்த விண்ணப்ப வழிகாட்டியானது ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு கண்ணோட்டத்தை வழங்குவதோடு, இணையவழி விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அனைத்து விவரங்களும் சரியாக உள்ளிடப்படுவதை உறுதி செய்வதற்காக, இணையவழி விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு முன்பு இந்த வழிகாட்டியை கவனமாகப் படிக்கவும்.